என்.எல்.சி. முதலாவது அனல் மின் நிலையத்தின் ஆயுட் காலம் முடிவடைந்ததால் இன்றுடன் மூடப்படுகிறது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. முதலாவது அனல் மின் நிலையம், கடந்த 1962- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அனல் மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 6 யூனிட்டுகளும்,100 மெகாவாட் மின் உற்பத்திச் செய்யும் 3 யூனிட்டுகளும் செயல்பட்டு வந்தன.
முதல் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 600 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகள் என்ற நிலையில், அதையும் கடந்து அனல் மின் நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், என்.எல்.சி. முதலாவது அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததால், இன்றுடன் மூடப்படுகிறது. படிப்படியாக அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், என்.எல்.சி. நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதேபோல், முதல் அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்ற அனல் மின் நிலையத்தில் பணி மாற்றப்பட்டனர்.
என்.எல்.சி. முதலாவது அனல் மின் நிலையம் சோவியத் ரஷ்யா தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.