கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரிய பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி நிறைமதி(48). ரவிக்குமார் என்.எல்.சியில் மேலாளராகவும், அவரது மனைவி நிறைமதி அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11.6.2014 அன்று காரில் அரியலூரில் இருந்து சென்னைக்கு இருவரும் சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே சென்றபோது கார், பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நிறைமதி உயிரிழந்தார். ரவிக்குமார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார். இந்த விபத்து தொடர்பாக ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் கடலூர் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள் சிவமணி, சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி இருதயராணி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், விபத்தில் இறந்த என்.எல்.சி அதிகாரி நிறைமதி குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ரூபாய் 98,05,336 ரூபாய் நஷ்ட ஈடாகவும், தொகையை நீதிமன்றத்தில் வைப்பு செய்யும் வரை அதற்கான வட்டி 7.5% சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டார்.
இதேபோல் விபத்தில் படுகாயமடைந்த என்.எல்.சி. இணை மேலாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மற்றொரு மனு மீது நடைபெற்ற விசாரணையில், 'படுகாயமடைந்த ரவிக்குமாருக்கு ரூபாய் 46,39,380 நஷ்ட ஈடாக வழங்கவும், நீதிமன்றத்தில் தொகையை வைப்பீடு செய்யும் வரை 7.5 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு வழக்குகளிலும் உயிரிழந்த மனைவிக்கும், காயமடைந்த கணவனுக்கும் சேர்த்து 1.44 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கடலூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.