கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்காக கடந்த காலங்களில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கம் மற்றும் புதிய சுரங்கங்களுக்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி வட்டங்களில் உள்ள 28 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வேலை, சமமான இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் தோழமைக் கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமாறன், ஜல்லிக்கட்டு ஜலீல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் அறிவழகன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தின் போது, "என்.எல்.சிக்கு நிலம் மற்றும் வீடு கொடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். 2000 வருடம் முதல் 2020 வருடம் வரை நிலம் கொடுத்த அனைவருக்கும் சமமான இழப்பீடு, சமமான வாழ்வாதாரம், மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் முழுமையாக பராமரிக்க வேண்டும். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை எப்பொழுதும் தனியாருக்கு கொடுக்கக் கூடாது. சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கடலூர் மாவட்ட மக்களுக்கு தேவையான சுகாதார மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.