ஆளும் அரசு நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தவறியதன் விலைவே தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி.
மயிலாடுதுறை வந்திருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், "உலகில் பல்வேறு நாடுகளில் நிலத்தடி நீரை எடுக்க தடை இருக்கிறது ஆனால் தமிழகத்தில் மட்டுமே தேவைக்கு அதிகமாகவே நிலத்தடி நீரை உறிஞ்சி வீணாக்குகிறோம். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்பில்லை. ஆனால் நாற்றங்கால் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது அறுவடை வரை அனைத்து விவசாயிகளுக்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்தப்போகிறோம்.இது ஹைட்ரோகார்பன் எடுப்பதால் ஏற்படும் விளைவைவிட மோசமான விளைவை ஏற்படுத்தும்.
ஏரி குளங்களை துர்த்து அரசு பல்வேறு இடங்களில் கட்டடங்களை கட்டியுள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டம், மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை, சேலம் பேருந்து நிலையம் ஏரியை துர்த்து கட்டப்பட்டுள்ளது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தென்னம்பாளையம் ஏரிரை துர்த்து கட்டப்பட்டுள்ளது. இதன் விளைவு தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரம் போன்று தண்ணீர் இல்லாத நிலை சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவில் வரும்.
முறையான திட்டமிடல் இல்லாதது குடிநீர் பிரச்சினைக்கு காரணம்.காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் நிலத்தடி நீரையும் சேர்த்து கணக்கிட்டுள்ளனர். இது தவறான ஒன்றாகும் இதனை தமிழக அரசு ஏன் எதிர்க்கவில்லை என்பது புரியவில்லை. மாதாந்திர கணக்கு அடிப்படையில் காவிரியில் கர்நாடகா தண்ணீர் தருவதில்லை. அவர்களது வடிகாலாகத்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை பயன்படுத்துகின்றனர். பெட்ரோல் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது போல் காவிரி நீரையும் தினசரி பங்கீடு செய்திருந்தால் 270 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்காது. அவ்வாறு செய்தால் மட்டுமே நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த முடியும். நிலத்தடி நீரை தொடர்ந்து எடுத்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் உள்ள 8 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலையாகிவிட்டது. நிலத்தடி நீர் தற்போது 500 அடி ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. வரும் காலத்தில் டெல்டா மாவட்டங்களில் தாவரங்களுக்கு கூட நீர் கிடைக்காமல் பாலைவனமாகும் நிலை ஏற்படும்." என்றார்.