Skip to main content

திருமணம் முடிந்த கையோடு 50 மரக்கன்றுகளை நட்ட புதுமணத் தம்பதிகள்...

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

Newly married couples Planted saplings

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் இயற்கை ஆர்வலர் பட்டதாரி திருநாவுக்கரசு வசித்து வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை மீது ஆர்வம் கொண்டு மரம், பனை மரங்களை வளர்க்க வேண்டிய அவசியங்கள், இயற்கை உணவு மற்றும் மருந்தில்லாமல் வாழ்வது  குறித்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். மேலும் இயற்கை ஆர்வலர்களோடு இணைந்து பல ஆயிரக்கணக்கான பனை விதைகளை விதைத்தும் மரக்கன்றுகளை நட்டும் வருகிறார்.

 

கிராம இளைஞர்கள் படித்து போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், மாவட்ட நூலகத்தோடு இணைந்து கீழக்காவட்டாங்குறிச்சி காலனித் தெருவில் புதிதாக நூலகத்தைக் கொண்டு வந்துள்ளார். 


கிராம இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்போடு நூலகம் அருகே குப்பை மேடாக கிடந்த இடத்தைச் சுத்தம் செய்து அதில் செம்மண் அடித்துச் சமமாக்கி, அதனைச் சுற்றி கம்பி வேலி அமைத்து அதில் திருக்குறள் பூங்கா ஒன்றை அமைத்தும் மூலிகைத் தோட்டங்களை அமைத்தும் பராமரித்து வருகிறார். 

 

இவர் தற்போது அரசு ஊழியராக அரியலூர் மாவட்ட வருவாய்த் துறையில் விகைகாட்டி அருகில் நாகமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வருகிறார். இன்று 21/08/2020 இயற்கை ஆர்வலர் பட்டதாரியான பிரன்னிதா என்ற இலந்தைக்கூடம் கிராமத்தில் பிறந்த தனது நெருங்கிய உறவினர் மகளை மணமகளாக ஏற்று திருப்பூட்டு விழா எனத் திருமண அழைப்பிதழில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் திருமணம் முடிந்த உடனேயே மணக்கோலத்துடன் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள வண்ணான் குளம் என்ற நீர்நிலையின் கரையில் ஏராளமான கருவேல மரங்கள் இருந்தது அவற்றை அகற்றி சுத்தம் செய்து அந்த இடத்தில் 50 மரக்கன்றுகளை நட்டனர் புதுமணத்தம்பதிகள். 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மரங்களின் நண்பர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் மணக்கோலத்துடன் மரக்கன்றுகளை நடும் மணமக்களின் இயற்கைப் பற்றை வெகுவாகப் பாராட்டினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்