நுகர்வோர் விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பின் தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், அமைப்பின் நிறுவனர் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுல்தான் அலி, தமிழக மாநில தலைவர் ராஜன் சீனிவாசன், தமிழக செயலாளர் ராஜேஷ், ஜம்மு,காஷ்மீர் மாநிலத் தலைவர் ராஜ், மனிதவளத்துறை தலைவர் தருண் கஹானி, ஆந்திர மாநில பொறுப்பாளர் மதுகோனேரு, வெளி விவகாரத் தொடர்பாளர் ராம்பாபு பொதுப்பிரிவு நிர்வாகி சிவ நாயுடு ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது "நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்புகளுக்கான ஒரு அமைப்பாக ஆஸ்ரா (advocator Association for social responsibility and awareness) என்ற அமைப்பு டெல்லியில் 2016 ல் பதிவு பெற்றுள்ளது. இதில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்த அமைப்பாக இது செயல்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா இந்த அமைப்பைப் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு மற்றும் நிவாரண ஆணையத்தின் சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதன்மையான நோக்கம், நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறோம். இந்த அமைப்பில் 756 பாதுகாவலர்கள் உள்ளனர். 9 மாநிலங்களில் 2000 க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி உள்ளோம். 10,000 க்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிமன்றத்திற்குப் போகாமலே சமரசம் மூலம் தீர்வு கண்டு வெற்றி பெற்றுள்ளோம். ஆந்திர மாநிலத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனம் செயல்பட்டு வருகிறது. இதன் விரிவாக்கமாக தமிழகத்தில் தேசிய ஆட்சிக் குழுக் கூட்டம் நிறுவனர் சுல்தான் அலி தலைமையில் இன்று நடைபெற்றது. தற்போது ஆஸ்ரா அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநரான ராஜன் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆஸ்ராவின் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.