தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், 'ஒமிக்ரான்' வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கடித்தால் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்தும், 'ஒமிக்ரான்' தொற்றுநோய் பரவலைத் தடுப்பது குறித்தும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (31/12/2021) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றன.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். அதேபோல், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்திற்கு பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.