தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாட்டிற்கான ரீடிங்கைக் கணக்கிட்டு, அதற்குரிய தொகையை வசூலிக்கும் நடைமுறை இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரீடிங் எடுப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சூழலில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் ரீடிங் எடுக்கும் நடைமுறையைக் கொண்டு வருவோம்” என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது கரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமாக பரவுவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 24ஆம் தேதிவரை அமலில் இருக்கும் ஊரடங்கை, மேலும் பல கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் தெரிவித்துவருகிறார்கள். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுடன் நாளை (22.05.2021) ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்கிடையே, கரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த மாதம் மின் கட்டணத்திற்கான ரீடிங் எடுக்கும் மின் பணியாளர்களை, ரீடிங் எடுக்க செல்ல வேண்டாம் என்றும், கடந்த 2019 மே மாதத்தில் எவ்வளவு தொகையை மின் கட்டணமாக மக்கள் செலுத்தினார்களோ அதையே இந்த மே மாதத்தில் கட்டுவதற்கேற்ப கட்டணத்தை மின் நுகர்வோர்களுக்கு அனுப்பி வைக்கலாம் என முடிவுசெய்து, மின் வாரியத்திற்கு இதுகுறித்த உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கிறது.
இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனுக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார் மின்சாரத் துறையின் ஊழல்களுக்கு எதிராக போராடிவரும் சமூக ஆர்வலர் சி. செல்வராஜ். அவரிடம் நாம் பேசியபோது, “தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில், மின்சார வாரியத்தின் சேர்மனுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவில், 2019 மே மாதத்தில் என்ன மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதையே இந்த மாதத்திலும் வசூல் செய்யுங்கள் என்பதே அந்த உத்தரவின் சாரம்சம். கரோனா பரவல் அதிகரிப்பதால் அசஸ்மெண்ட் எடுப்பதில் சிரமம் இருக்கும் என்கிற காரணத்தை இதற்காக குறிப்பிடுகிறார்கள்.
மின்சார பணி என்பது அத்யாவசிய பணி என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் மின் பணியாளர்கள் அனைவரும் வேலைக்கு வர வேண்டும்; அவரவர்களுக்குரிய பணிகளைச் செய்ய வேண்டும் என்று அர்த்தம். இதில் செக்சன் ஆஃபிசர்களாக இருக்கக் கூடிய லைன்மேன்கள் பணிக்கு வர வேண்டும். அதே செக்சன் ஆஃபிசர் கேடரில் இருக்கும் அஸசர்கள் பணிக்கு வரத் தேவையில்லை என்றால் எப்படி? கரோனா தாக்குதல் பரவக்கூடாது என்றால் இரு தரப்புக்கும்தானே லீவ் கொடுக்க வேண்டும்? தெருத்தெருவாக அலைந்து மின் தடைகளை சரி செய்யும் லைன் மேன்கள் பணிக்கு வர வேண்டும்; வீடுகளுக்குச் சென்று மின் ரீடிங்கை எடுக்கும் கணக்காரளர்கள் (அஸசர்கள் ) வரத் தேவையில்லையாம்.
ஆக, கணக்காளர்கள் ரீடிங் எடுக்கத் தேவையில்லை என்பதால் 2019 மே மாதத்தில் வசூலித்த கட்டணத்தையே இந்த மாதத்திலும் வசூலிக்க ஆர்டர் பிறப்பிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. இதை எதிர்த்து, ஆணையத்தின் சேர்மனுக்கும், வாரியத்தின் சேர்மனுக்கும் புகார் அனுப்பினோம். இதனையடுத்து, இந்த மாதத்திற்கான ரீடிங்கை வீட்டில் இருப்பவர்களே ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைக்கலாம் என புதிதாக ஒரு ஆர்டரைப் பிறப்பிக்கிறார்கள். இதெல்லாம் பொது மக்களுக்கு சாத்தியமா ?
கரோனா நெருக்கடி, ஊரடங்கு அமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பிவரும் நிலையில், 2019 மே மாதம் கட்டிய கட்டணத்தையே இந்த மாதத்திற்கான கட்டணமாக வசூலிக்க ஆர்டர் போடுவது சட்டவிரோதம். ரீடிங்கை மக்களே ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்வது அதைவிட மோசமானது” என்கிறார்.
பொதுமக்களிடமும் கொந்தளிப்பு உருவாகிவருகிறது. நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி என்பவர், “தாம்பரம் பகுதியில் கடந்த வருடம்தான் வாடகைக்கு குடியேறினேன். இந்த மாத மின் கட்டணமாக 2019 மே மாத கட்டணத்தையே மின் வாரியம் போட்டுள்ளது என வீட்டு உரிமையாளர் என்னிடம் சொல்கிறார். 2019இல் நான் உங்கள் வீட்டிற்கு குடியே வரவில்லை. 2019இல் எனக்கு முன்பிருந்தவர் அதிகமாக மின் கட்டணம் கட்டியிருக்கிறார். அதே கட்டணத்தை நான் எப்படி கட்ட முடியும்? இது லாஜிக்கே இல்லையே! என சொன்னால் வீட்டு உரிமையாளர் ஏற்க மறுக்கிறார். 2019இல் யாரோ பயன்படுத்திய கட்டணத்தை நான் எப்படிங்க என்னுடைய கட்டணமாக இந்த மாதத்தில் ஏற்க முடியும்?” என்று அரசுக்கு எதிராக கோபமாக வெடிக்கிறார் சத்தியமூர்த்தி.
மின்சார ஆணையத்தின் இத்தகைய உத்தரவுகளால் கோபமும் அதிர்ச்சியும் மக்களிடையே அதிகரித்துவருகிறது.