நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி
புதுகை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுக்கோட்டை, செப்.20- நீட் தேர்விலிருந்து மத்திய அரசு முழுமையான விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமையன்று மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் மேடை இடிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் பார்வையாளர் மேடையை இடிக்கக்கூடாது என வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
-இரா. பகத்சிங்