தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம், பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில், இன்று (02/04/2021) தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அடுத்தபடியாக கன்னியாகுமரியில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், ''கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மணிமண்டபமும் பல இந்தியர்களைக் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை மத்திய, மாநில அரசுகள் செய்துள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் மும்பை- கன்னியாகுமரிக்கு இடையில் ஒரு புதிய பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் யாரும் கவலைப்படாத நிலையில் பாம்பனில் புதிய பாலம் கட்ட பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். ஒன்றிரண்டு குடும்பங்கள் மட்டும் இந்தியாவை உருவாக்கவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வியர்வையில் உருவாக்கப்பட்டது இந்தியா. திமுகவில் உள்ள வாரிசு அரசியலால் மூத்த தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர்'' என்றார்.