தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் இருந்து வந்த இந்தியர்களில் 6 பேருக்கு உருமாறிய கரோனா உறுதியானதாகவும், அவர்கள் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகரிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், கரோனா உறுதியான நபர்களின் மாதிரிகளை புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகளை அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் ஒருவருக்கு உருமாறிய கரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கரோனா உறுதிச் செய்யப்பட்ட நபருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 30 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 17 பேரின் மாதிரிகளில் 16 பேரின் முடிவுகள் வரவில்லை. உருமாறிய கரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யபப்ட்டுள்ளது. அதேபோல், இந்த நபருடன் விமானத்தில் வந்த 15 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது; இதில் யாருக்கும் கரோனா இல்லை" என்றார்.