Skip to main content

100 ஆண்டு பழமையான பள்ளி! சுவர் இடிந்து மாணவர்கள் பரிதாப பலி! நேரில் விரைந்த ஆட்சியர்! 

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Nellai School compound issue

 

நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8ஆம் வகுப்பு பயின்றுவந்த இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 3 மாணவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் அழைத்துச் சென்றனர். இதில், ஒரு மாணவர் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 

100 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 1000 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில் சில கட்டடங்கள் பழைய கட்டடமாகவும் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுவர்கள் எல்லாம் தளர்ந்து போயிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் காலை பள்ளி துவங்கி நடைபெற்றுவந்தது. அதேபோல், காலை இடைவேளை நேரம் வந்தபோது, மாணவர்கள் கழிவறையை உபயோகப்படுத்தியுள்ளனர். அப்போது, 8 வகுப்பு மாணவர்கள் சென்றபோது கழிவறை சுவர் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று மாணவர்கள் பலியாகினர். இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

சக மாணவர்களின் மரணத்தால் ஆத்திரமடைந்த அப்பள்ளி மாணவர்கள், வீதியில் வந்து சிறிது இடைஞ்சலும் கொடுத்துள்ளனர். அதேசமயம் சம்பவம் குறித்து பெற்றோர்களுக்குத் தகவல் சொல்ல, பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்