Skip to main content

கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னை, டெல்லி ஆகிவிடக்கூடாது! -பசுமையான காடுகளைக் காக்க தமிழக அரசுக்கு உத்தரவு! 

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் மரங்களை வெட்டுவதைத் தவிர்க்கும் வகையில் மாற்று இடத்தில் கூடுதல் கட்டிடங்களை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை டிசம்பர் 4-ஆம் தேதி தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

 

madras court on egmore eye hospital case

 

 

உலகிலேயே மிகவும் பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது. மரங்கள் வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 
 

இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மருத்துவமனை வளாகத்தில் 25 மரங்கள் மட்டும்தான் அகற்றப்பட இருப்பதாகவும், மாற்று இடத்தில் நட இருப்பதாகவும் கூறி புகைப்பட ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது. 
 
அப்போது மனுதாரர் தரப்பில் பழமையான மரங்களை ஓரிடத்திலிருந்து மாற்றி வேறொரு இடத்தில் நடுவதால் அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானது என்று தெரிவித்தார். 
 
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மரங்களை வெட்டாமல்,  வளாகத்தில் உள்ள மாற்று இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 
விசாரணையின்போது, மீண்டும் ஒரு டெல்லியாக சென்னை மாறிவிட விரும்பவில்லை என்றும், கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையின் இதயம்போல் இருக்கும் பசுமையான காடுகளை காக்க வேண்டுமென தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்