நெல்லை கண்ணன் அழுத்தமான, ஆழமான எதற்கும் அஞ்சாத சங்க நாதமாய், கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மைக் கொண்ட பேச்சாளர், வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் ‘நெல்லை கண்ணன்’ என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18- ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவால் உணவு சரியாக உண்ண முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1945- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி அன்று பிறந்தவர் நெல்லை கண்ணன். நெல்லை டவுண் பகுதியில் பூர்வீக வீட்டைக் கொண்டவர். பள்ளிப்படிப்பின் போதே பேச்சில் ஈர்ப்புத் தன்மை கொண்டவராய் இருந்தவர். நினைவு தெரிந்த நாள் முதலே காங்கிரஸ் கட்சியில் இணைந்த நெல்லை கண்ணன் கட்சியில் “நட்சத்திரப் பேச்சாளர்” என்ற அந்தஸ்தை அடைந்தவர். கட்சியின் மிகச்சிறந்த பேச்சாளர் அரசியல் மேடைகளில் அரசியல் சார்ந்தவைகள் சட்டயர் எனப்படுகிற தன்னுடைய நையாண்டி பேச்சால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைக் கவர்ந்தவர்.
அதன் காரணமாக காங்கிரசில் நெல்லை கண்ணன் பொதுக்கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் திரளும். கட்சிக்குள்ளேயே நெல்லை கண்ணனுக்கு கணிசமான ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. இதன் காரணமாகவே, காங்கிரஸ் காரிய கமிட்டி உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
“காமராசரின் சிஷ்யர்” என்றழைக்கப்பட்டார். அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர் ஆனார். அது மட்டுமல்ல கண்ணதாசனின் நெருங்கிய நண்பரானார். தன்னுடைய கருத்துக்களைப் பிசிறின்றி துணிச்சலாக எடுத்து வைப்பவர். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொலையுண்ட அன்று மாலை பாளை மார்க்கெட் பகுதியில் காங்கிரஸ் கூட்டம். கூட்டம் கட்டுக்கடுங்காமல் திரண்டிருந்தது.
அந்த இரங்கல் கூட்டத்தில் வெகுநேரம் பேசிய நெல்லை கண்ணனின் இரங்கல் பேச்சு திரண்ட கூட்டத்தினரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து கதற வைத்த சம்பவமும் நிகழ்ந்ததுண்டு. அத்தகைய ஆற்றல் பேச்சைப் பிறவியிலேயே கைவரப் பெற்ற நெல்லை கண்ணன் 2012- ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினாலும், அக்கட்சியின் மீதான தன் பற்றுதலைக் கைவிடாமல் நெஞ்சின் ஓரத்தில் அதன் நினைப்பையும் வைத்திருந்தார்.
இந்த நிகழ்வுக்குப் பின்பு நெல்லை கண்ணன் அரசியல், கலை, இலக்கிய, இலக்கண கூட்டங்களில் தன்னுடைய பொறிபறக்கும் பேச்சால் பட்டயக் கிளப்பினார். மேடையில் இலக்கியம், செய்யுள், கம்பராமாயணம், திருவள்ளுவர் போன்ற இலக்கியங்களை வரிவிடாமல் அருவியாய் கொட்டும் குரலால் பின்னிவிடுவார். இதில் பட்டிமன்றம் என்று வருகிறபோது நெல்லை கண்ணன் ஒரு அணி என்றால், எதிரணியின் பேச்சாளர்கள் அவருக்கு எப்படி ஈடுகொடுப்பது என்ற பதட்ட உணர்வுகளிலேயே இருப்பார்கள் என்கிறார்கள் நெல்லை கண்ணனுக்கு நெருக்கமானவர்கள்.
ஒரு முறை கலைஞர் தலைமையிலான கம்பன் கழகத்தின் கூட்டம் மேடையில் தலைவர்கள் பலர் வீற்றிருந்தனர். இந்த மேடையில் பேசிய நெல்லை கண்ணனின் சிறப்பான பேச்சைக் கேட்டு கலைஞரே எழுந்து நின்று பாராட்டிக் கைதட்டியதுண்டு. அன்று முதல் கலைஞரின் நண்பரான நெல்லை கண்ணன் தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்க வில்லை. பின்னாளில் சேப்பாக்கத்தில் கலைஞரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் நெல்லை கண்ணன்.
கோவை, ஈரோடு, திருச்சி என்று பல நகரங்களில் புத்தகத் திருவிழா நடத்தும் அமைப்பாளர்கள் அதில் கண்டிப்பாக நெல்லை கண்ணனின் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். அவரது இலக்கிய பேச்சு சொற்பொழிவுப் பாப்புலாரிட்டிக்காகவே பெருங்கூட்டம் திரளும் என்பதால் புத்தகத் திருவிழாவில் நெல்லை கண்ணனின் சொற்பொழிவு தவறாமலிருக்கும்படி ஏற்பாடுகளைச் செய்வதுண்டு.
அரசியல், இலக்கியம், கலை என்றில்லாமல் சினிமா உலகத்திலும் நெல்லை கண்ணன் பெயர் ஊடுருவியிருந்ததுண்டு. அறிவுமதி, அன்புமதி உள்ளிட்ட சினிமா பாடலாசிரியர்கள் நெல்லை கண்ணனின் பேச்சுக்கும், இலக்கியச் சொற்பொழிவிற்கும் அடிமையானவர்கள். இதுபோன்று அவருக்கென்று தனி ரசிகர்கள் படையே உண்டு. தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதும் பெற்றதுண்டு.
எடுத்து வைக்கும் கருத்தை பின் வாங்காமல் முன் வைத்தே தீரும் நெஞ்சுரம் கொண்ட நெல்லை கண்ணன் ஒன்றரை வருடம் முன்பு தான் கலந்து கொண்ட பாளை இஸ்லாமிய மாநாட்டில் அரசியல் பற்றிய விமர்சனம் வைத்து சர்ச்சையானதால் எடப்பாடி அரசு அவரை கைது செய்து ரிமாண்ட் செய்தது. இதனால் பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் கிளம்பின. வயது மூப்பு காரணமாக பின்னர் பிணையில் வெளியே வந்தார் நெல்லை கண்ணன். அந்த வசீகரமான காந்தக் குரல்கள் இனி மேடைகளில் ஒலிக்கப் போவதில்லை தான். வளர்ந்த அரசியல்வாதிகளுக்கும், வளர்கின்ற இளம் தலை முறையினருக்கும் நெல்லை கண்ணனின் இலக்கிய, இலக்கணப் பேச்சுக்கள் ரோல் மாடல்கள்.