கடந்த மாதம் மேலப்பாளையம் எஸ்.டி.பி.ஐ.யின் மாநாட்டில் பேசிய தமிழ் இலக்கிய வித்தகர் நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா இருவரையும் பற்றிப் பேசிய போது யதார்த்தமாக நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் வழக்காற்று மற்றும் சகஜமாகப் புழங்கும், சோலி பற்றிப் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. காரியத்தைப் பார், வேலையை முடி என்று பிற பகுதிகளில் பேசப்படுவதைப் போன்று தான் நெல்லை வழக்காடுப் பேச்சு சோலியைப் பார். சோலியை முடி என்பது ஆனால் நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு திரிக்கப்பட்டு மத்திய அமைச்சர்களை அவதூறாக விமர்சித்தார் என்று பா.ஜ.க.வினர் மத்தியில் பரவ, நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 76 வயது கடந்த நெல்லை கண்ணன் உடல் நலமில்லாமலிருந்தார்.
![nellai kannan bail district court judgement](http://image.nakkheeran.in/cdn/farfuture/j8rbf51hg5YcGgNH-ACdOzgl7p2UcVvnglsaCVvUlQo/1580400324/sites/default/files/inline-images/nellai5_4.jpg)
சிகிச்சைக்காக மதுரை, பெரம்பலூர் சென்ற நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் மருத்துவ சோதனை செய்யப்பட்ட பிறகு தளர்ந்த நிலையிலிருந்தவரை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்திய போலீசார், பின் மேலிருந்து வந்த உத்தரவினையடுத்து அவரை மதுரை, பின்பு தொலைவிலுள்ள சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
இந்தக் கைதைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தலைவர்கள் என்று அனைத்து தரப்பிலும் ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கைகள் என்று கிளம்பி பரபரப்பு சூட்டைக் கிளப்பியது. இந்நிலையில் நெல்லை கண்ணனின் வழக்கறிஞரான பிரம்மா அவர் சார்பில் நெல்லை செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த மாவட்ட நீதிபதி நசீர் அமகது நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் ஆஐராகி கையெப்பமிடவேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். அதன்படி சேலம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் அன்று மாலையே மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அஐரானார். ஆனால் உரிய ஆவணம் வரவில்லை என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு அவர் அலைக் கழிக்கப்பட்டார்.
![nellai kannan bail district court judgement](http://image.nakkheeran.in/cdn/farfuture/u41WEIzKpVh9XeEor_gII_E4HpU1W1rwwgpd6NQftGU/1580400344/sites/default/files/inline-images/nellai3_4.jpg)
கடந்த 13- ஆம் தேதி முதல் தன் உடல் கோளாறையும் தாங்கிக் கொண்டு காலை, மாலை என மேலப்பாளையம் காவல் நிலையம் இருமுறை ஆஐராகி கையெழுத்திட்டிருக்கிறார் நெல்லை கண்ணன். இந்த நிலையில் அவருக்குச் சளித் தொந்தரவு அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதினடையே கடந்த 23- ஆம் தேதி அன்று நெல்லை கண்ணனி்ன் நிபந்தனை ஜாமீனைத் தளர்வு செய்ய அவரது வழக்கறிஞர் பிரம்மா செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு 27- ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது அன்றையதினம் வழக்கறிஞர்களின் நீதிமன்றப்புறக்கணிப்பு காரணமாக வழக்கு 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று அவரது மனு விசாரணைக்கு வந்த போது அவரது வழக்கறிஞர் பிரம்மா, நெல்லை கண்ணனின் உடல் நிலை பற்றி முன்வைத்தவர் நிபந்தனை ஜாமீனை தளர்வு செய்யக் கேட்டார். அது சமயம் போலீஸ் தரப்பிலும் அவர் கடந்த 13- ஆம் தேதியிலிருந்து நேற்றைய தினம் வரை தவறாமல் ஆஐராகி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாலையில் மனு மீது தீர்ப்பு வழங்கிய செசன்ஸ் நீதிபதி நசீர் அகமது, நெல்லை கண்ணனின் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து அவரது வழக்கறிஞரான பிரம்மா கூறும்போது, "நெல்லை கண்ணனின் உடல் நலம் பற்றியும் அவரது ஒத்துழைப்பு பற்றியும் நீதிமன்றத்தில் முன்வைத்தோம். அனைத்தையும் ஆராய்ந்த நீதிபதி, நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலை, மாலை 2 வேளையும் ஆஐராகும் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத் கிளையில் இந்த வழக்கை ரத்து செய்ய நாங்கள் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது" என்றார்.
![nellai kannan bail district court judgement](http://image.nakkheeran.in/cdn/farfuture/p0NJv3NqPJg9HEJFkv1XZ-YNz3fqvQmPhz6CqfxIfxU/1580401413/sites/default/files/inline-images/pramma.jpg)
இதனிடையே நெல்லை கண்ணன் சளி தொந்தரவு காரணமாக நெல்லை ஜங்ஷனில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.