நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் சூரி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், ரசிகர்களும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூடியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு கலையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை இதுவரை ஐந்து முறை பெற்றுள்ளார். 'உன்னருகே நானிருந்தால்', 'பார்த்திபன் கனவு', 'அந்நியன்', 'சிவாஜி' ஆகிய படங்களுக்காக விருது பெற்றுள்ளார். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது, விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, மாதவன் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, கோவை சரளா, சந்தானம், யோகிபாபு ஆகியோருடனும் நடித்துள்ளார். 'நான் தான் பாலா', 'வெள்ளைபூக்கள்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.