கரோனா தொற்றும் பரவும் சூழலில் டாஸ்மாக் வேண்டவே வேண்டாம் என அனைத்துக் கட்சிகளும் போராடிய வேளையில், ஆளும் அதிமுக அரசு மட்டும் டாஸ்மாக்கை அனுமதித்தது. இதனால், நெல்லை மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு கூலித் தொழிலாளர்கள் குடிபோதையால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய, மாநில அரசுகள். நாடு முழுவதும் மே 17- ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் போது, சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதில் நோய்க்கட்டுப்பாடுப் பகுதியினைத் தவிர மற்றைய இடங்களில் மதுபானக்கடைகளைத் திறக்க அனுமதிக்கும் வகையிலான தளர்வும் இருந்தமையால், தமிழ்நாட்டில் மட்டும் மதுபானக் கடைகளான டாஸ்மாக் வேண்டவே வேண்டாம் எனத் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராடிப் பார்த்த நிலையில், மே 7- ஆம் தேதி அன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமென அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசு. எதிர்பார்த்தது போலவே கரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் ஒருபுறம் இருக்க, குடிபோதையால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் கூடங்குளம், ராஜவல்லிபுரம் மற்றும் பிரம்மதேசம் ஆகிய இடங்களில் மூன்று கொலைகளும், மானுார், முக்கூடல், சேர்ந்தமரம் மற்றும் கண்டியப் பேரி உள்ளிட்ட பல இடங்களில் அரிவாள் வெட்டு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
நோய்க்கட்டுப்பாடு உள்ள மேலப்பாளையம் பகுதியிலுள்ள இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தவிர, நெல்லை மாவட்டத்தில் மட்டும் 95 கடைகள் இயங்கின. 43 நாட்களுக்குப் பின் திறக்கப்பட்ட மதுக் கடையால் குஷியான குடிமகன்கள் தங்களது தாகம் தீரும் வரை குடித்துத் தங்களின் வேலைகளைக் காட்டத் துவங்கினர். நெல்லை புறநகர் மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்டது ராஜவல்லிபுரம். இங்கு டீக்கடை நடத்தி வரும் துரைராஜ் ஊரடங்கின் போது டீக்கடை திறந்தார் எனக் காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான தகவலைக் கொடுத்தது அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து தான் என நினைத்து வந்த துரைராஜின் மகன் சுரேஷ், தனது நண்பன் இசக்கிராஜாவோடு சேர்ந்து மதுபோதையில் இசக்கிமுத்துவின் தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்தினை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
இதில் முதல் கொலையாகப் பதிவான அதேவேளையில், இரண்டாவது கொலையாக, அம்பாசமுத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிரம்மதேசம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முப்பிலி பாண்டிக்கும் கோயில் வரி வசூல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று (07/05/2020) டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் நிறைவாகக் குடித்த முப்புலிபாண்டி தனது தம்பி மருதுபாண்டி துணையுடன் ராஜேந்திரனிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ராஜேந்திரனை வெட்டிக் கொன்றனர். காவல்துறையும் விசாரணை செய்து வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தது.
மூன்றாவது கொலையோ, சொத்துக் கேட்டு பெற்றத் தாயை வெட்டிக் கொன்றதாக வழக்குப் பதிவானது. கூடங்குளம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. 60 வயது பெண்மணியான இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் கடைசி மகளுடன் தனியாக வசித்து வந்திருக்கின்றார். நேற்று தனியாக இருந்த ஜெயமணியிடம் அவர் வசிக்கும் வீட்டினை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு மகன் ராஜன் அளவுக்கதிமான குடிபோதையில் கேட்டு தொந்தரவு செய்ததாகத் தெரிகின்றது. மறுத்தத் தாய் ஜெயமணியை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளதாகத் தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா விசாரணை செய்து வழக்குப் பதிந்து கொலையாளியான மகன் ராஜனைக் கைது செய்தார். ஒரே மாவட்டத்தில் இரண்டு அன்றாடங்காய்ச்சிகளும், பெற்ற தாயும் பலியானது டாஸ்மாக் போதையால் என்பது வெட்டவெளிச்சமாகியது. இதனால், எதிர்க்கட்சிகள் மீண்டும் டாஸ்மக்கிற்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றன.