நெல்லை அருகேயுள்ள தாழையூத்தைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்துவந்த கண்ணன், நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் தனது லோடு வேனில் வீட்டிற்குத் தேவையான குடிதண்ணீரைப் பிடிப்பதற்காக 10 ப்ளாஸ்டிக் குடங்களுடன் தாழையூத்து நான்கு வழிச் சாலையிலிருக்கும் பண்டார குளத்திற்குச் சென்றிருக்கிறார்.
அவரை வேவு பார்த்த ஒரு கும்பல் அவரை பின் தொடர்ந்திருக்கிறது. அங்குள்ள பொதுக்குழாயில் கண்ணன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. பதறிப்போன அவர், உயிர் தப்பிக்க ஓடியிருக்கிறார். ஆனாலும், அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் சாலையில் வழிமறித்து சரமாரியாக கண்ணனை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது அந்த கும்பல். ரத்த வெள்ளத்தில் மிதந்து துடித்த கண்ணனை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்ற போது வழியிலேயே கண்ணனின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்த சம்பவத்தின் போது அங்கு நின்றிருந்தவர்கள் பதறி, சிதறி ஓடியிருக்கிறார்கள்.
தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த நெல்லை டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ், எஸ்.பி.மணிவண்ணன், தாழையூத்து டி.எஸ்.பி. அர்ச்சனா உள்ளிட்ட போலீஸார் ஸ்பாட்டில் விசாரணையை நடத்தியிருக்கின்றனர். இது குறித்து நாம் பரவலாக விசாரித்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் பணகுடி பள்ளி ஒன்றில் மாணவனும் மாணவி ஒருவரும் காதலித்த விவகாரத்தில், மாணவிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அந்த மாணவியின் வாழ்க்கையில் மாணவன் குறுக்கிடாமல் இருப்பதற்காக அவரை சிங்கிகுளத்திற்கு வரவழைத்து அடித்து மிரட்டிய வழக்கில் களக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் மூன்றடைப்பு வாகைகுளத்தைச் சேர்ந்த முத்துமனோ, அருள்துரைசிங், மாதவன், சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய களக்காடு போலீஸார் கடந்த ஏப்ரல் 22 அன்று பாளை மத்தியச் சிறையில் அடைத்தனர். அது சமயம் சிறையிலிருந்த அவர்களின் எதிர் பிரிவைச் சேர்ந்த விசாரணைக் கைதிகளால் இவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து தாக்கியதில் முத்துமனோ சிறையிலேயே பலியானார். இந்தச் சிறைப் படுகொலையில் தொடர்புடையவர்களில் ஜேக்கப் மற்றும் கொக்கி குமார் குறிப்பிடத்தக்கவர்கள். இது தொடர்பாகச் சிறைக்காவலர்கள் சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.
பலியான முத்துமனோ தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் மாவட்ட மாணவரணிச் செயலாளரானவர். உரிய நிவாரணம் வேண்டும், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டுமென்று போராடிய முத்துமனோவின் உறவினர்கள் அரசால் அறிவிக்கப்பட்ட உதவித் தொகையையடுத்து 72 நாள் போராட்டத்திற்குப் பிறகே முத்துமனோவின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.
முத்துமனோ கொலைக்குக் காரணமான ஜேக்கப்பின் உற்ற நண்பர் தான் தற்போது கொலை செய்யப்பட்ட கண்ணன். முத்துமனோவின் கொலைக்குப் பழிக்குப்பழியாக அவரது ஆதரவாளர்கள் ஜேக்கப்பின் நண்பரைப் போட்டுத் தள்ளியிருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் போலீஸாரின் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. இதனிடையே தாழையூத்தின் சர்வீஸ் சாலையில் படுகொலையைக் கண்டித்தும், கண்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் கண்ணனின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாழையூத்துப் போலீஸார் ஒரு வழக்கின் காரணமாக ஜேக்கப்பைத் தேடியிருக்கிறார்கள். அது சமயம் தன் நண்பனான ஜேக்கப்பிற்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்து வந்திருக்கிறார் கண்ணன். இதையறிந்த போலீஸார் கண்ணன் வீட்டில் மறைந்திருந்த ஜேக்கப்பைக் கைது செய்து பாளை மத்தியச் சிறையில் அடைத்திருக்கின்றனர். அதன் பிறகே ஜெயிலில் முத்துமனோவின் படுகொலைச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. ஜேக்கப், கண்ணன் இவர்களின் நெருங்கிய தொடர்பையறிந்து முத்துமனோவின் கொலைக்குப் பழியாக தற்போது கண்ணனைக் குறிவைத்துப் படுகொலைச் செய்திருக்கலாம் என்று சந்தேகமுள்ளது. தவிர இந்தச் சம்பவத்தில் தற்போது முத்துமனோவிற்கு ஆதரவாகப் புதிய கேங்க் ஒன்று உருவாகியிருக்கலாம் என்றும் தெரிகிறது. மேலும் ஜேக்கப், ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியானவர் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
இது குறித்து நாம் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணனைத் தொடர்பு கொண்டதில், இந்தச் சம்பவத்தில் அந்த டீம் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணைப் போகிறது மேலும் இதில் தொடர்புடையவர்கள் புதிய நபர்களாகத் தெரிகிறது. எப்படியும் விரைவில் கொலைக்குக் காரணமானவர்களை வளைத்துவிடுவோம் என்கிறார் அழுத்தமாக. அண்மைக்காலமாக அடங்கியிருந்த பழிக்குப் பழி கொலைச் சம்பவம் தற்போது மீண்டும் தலைதூக்கி இருப்பது நெல்லை மாவட்டத்தைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.