Skip to main content

நீட் தேர்வு ஓம்.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு: விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

NEET EXAM OMR ANSWER SHEET CHENNAI HIGH COURT NATIONAL TESTING AGENCY

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு (National Testing Agency) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீட் தேர்வு நடந்து முடிந்த பின், அக்டோபர் மாதம் 5- ஆம் தேதி, தேசிய தேர்வு முகமை, அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. இதில், முதலில் 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17- ஆம் தேதி, திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆகக் குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

அந்த மனுவில், 594 என்பதையே தன் நீட் மதிப்பெண் எனக் கணக்கிட்டு, மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடைபெற்றபோது, நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய தேர்வு முகமை சார்பில், மாணவரின் அசல் ஒ.எம்.ஆர் விடைத்தாள், சம்மந்தப்பட்ட மாணவரிடம் காண்பிக்கப்பட்டது. அசல் விடைத்தாளில், அக்டோபர் 17- ஆம் தேதி இணையதளத்தில் காட்டியதாகக் கூறப்படும் 248 மதிப்பெண்ணை மாணவர் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

 

சந்தேகம் தீர்ந்ததாக நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்த நிலையில், சம்மந்தப்பட்ட மாணவர், தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகளை அடிப்படையாகக்  கொண்ட கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் சேர்த்து, அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் எடுத்த, 594 மதிப்பெண் எனக் காட்டிய ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களும், மாணவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

மாணவரின் இந்தத் தரவுகள் சந்தேகத்தைக் கிளப்புவதாகத் தெரிவித்த நீதிபதி, ‘அக்டோபர் மாதம் 5- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை காட்டப்பட்ட 594 மதிப்பெண்கள், திடீரென அக்டோபர் 17- ஆம் தேதி 248 ஆகக் குறைந்தது எப்படி? மின்னணு முறையிலான இது போன்ற விவகாரங்களில்,  யாரும் திருத்தம் செய்யவோ, ஊடுருவவோ முடியாது என்பதை அரிதியிட்டுச் சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அது சாத்தியம் எனும் பட்சத்தில், இது மிகப்பெரிய ஆபத்தாகும். அதனால், உடனடி விசாரணை தேவைப்படுகிறது.  

 

ஓ.எம்.ஆர் விடைத்தாளில் திருத்தம் செய்ய முடியும் எனும் பட்சத்தில், இது ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் சிக்கலை ஏற்படுத்தும். இதில், எதிர்கால மருத்துவர்களும், எண்ணற்றோர் வாழ்வும் சம்பந்தப்பட்டுள்ளது. ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, மதிப்பெண் எப்படி வேறுபட்டது என்பது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக விசாரணை நடத்தி, சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’ எனத் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

தற்போதைய நிலையில், மாணவர் முதலில் பெற்றதாகக் கூறும் 594 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, அவரை மருத்துவ கவுன்சிலிங்-ல் பங்கேற்க அனுமதிக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கும் பட்சத்தில், அதை இறுதி செய்யக் கூடாதென்றும், அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் தெரிவித்து,  விசாரணையை வரும் டிசம்பர் 23- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்