தேசிய தேர்வு முகமை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தும் நீட் நுழைவு தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இந்த நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை தேர்வர்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் டிரான்ஸ்பரன்ட் வாட்டர் பாட்டில் மட்டும் எடுத்து வர அனுமதி உண்டு. மற்றபடி மின்னணு சாதனங்கள், கொலுசு, செயின், பெல்ட் உள்ளிட்ட எதுவும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேலும், சாதாரண செருப்பு, தலையில் சாதாரண க்ளிப் உள்ளிட்டவை மட்டுமே அணிந்திருக்க வேண்டும் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
கடந்த சில வருடங்களாகவே நீட் தேர்வு எழுதும் முன்னர் சோதனை என்ற பெயரில் தேர்வு அலுவலர்கள் மாணவர்களை அத்துமீறி நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. தேர்வு எழுதும் போது மாணவிகளுக்கு திருமணம் நடந்திருந்தாலும் கூட தேர்வு எழுதும் மையத்திற்குள் செல்லும் போது தாலியை கழட்டிவிடச் சொல்லிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு எழுத வந்த மாணவியை உள்ளாடையை அகற்றச் சொல்லியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் சோதனையின் போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொல்லியுள்ளனர். மாணவியின் உள்ளாடையின் மீது சந்தேகம் எழுந்ததால் கண்காணிப்பு அலுவலர்கள் அகற்ற அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அந்த மாணவியும் தனது உள்ளாடையை அகற்றிய பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.