கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்கிற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும், அக்குழு இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து, அரசுக்கு ஒரு மாத காலத்தில் பரிந்துரை அளிக்கும் என்றும். பரிந்துரை அடிப்படையில் அரசு முடிவெடுத்து செயல்படுத்தும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் குழுவின் தலைவராக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, சுகாதாரத்துறை செயலாளர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், நீதியரசர் கலையரசன் இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். அடுத்த ஒரு மாத காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், முதல்வரிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வார். அதனடிப்படையில், இந்த ஆண்டு முதல் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.