Skip to main content

நீட் தேர்வு மதிப்பெண் குறித்து பயம்; விபரீத முடிவெடுத்த மாணவன்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

neet exam fear low mark thirupattur parameshwaran 

 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நடைபெற்ற  நீட் தேர்வை எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்றும், தேர்வில் குறைவான மதிப்பெண்களே கிடைக்கும் என்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரமேஸ்வரன் கூறியதாகச் சொல்லப்படுகிறது. நீட் தேர்வில் தனது முடிவுகள் எப்படி வருமோ என்று நினைத்துக்கொண்டே பரமேஸ்வரன் மிகவும் மனமுடைந்த நிலையில் விரக்தியடைந்து இருந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டின் அறையில் பரமேஸ்வரன் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்ட பெற்றோர் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை  பரிசோதனை செய்த மருத்துவர்கள் பரமேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

இது குறித்து அவரது தந்தை செந்தில்குமார் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு முடிவுக்கு பயந்து தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்