நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், "நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவு, தேசிய நலன் ஆகியவற்றின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவக் கல்வியை மேம்படுத்த மருத்துவ ஆணையத்திடம் மட்டுமே ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இதை அரசியலாக்கக் கூடாது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.