நீட் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி என்றும், விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் குடும்பநலத் துறையின் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனின் பதில் மனுவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் பி. முத்துக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய உண்மை கண்டறியும் குழுவை நியமித்ததன் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மனுவில் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். குழுவின் அறிக்கை, அரசின் நடவடிக்கைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சியைச் சேர்ந்த அவர் இந்த விவகாரத்தில் பொதுநலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை என்றும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு 84,343 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாகவும், நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை என்றும், அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர் விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்த அரசாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு என்ற போர்வையில் நல்லாட்சி வழங்கும் அதிகாரத்திலும், அரசியல் சாசன அடிப்படை பணிகளிலும் தலையிடும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.கே. ராஜன் குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்றும், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் எனவும், கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து ஆய்வுசெய்ய குழு நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் முறை 1984ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்ததாகவும், 2006ஆம் ஆண்டு முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத நிலை உள்ளதாக அரசுக்கு மனுக்கள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள், பயிற்றுவிக்கும் முறை, தேர்வு நடைமுறை, மதிப்பீடு என அனைத்தும் தமிழ்நாடு கல்வி வாரியத்திற்கும், பிற கல்வி வாரியங்களுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுதிய பின்னரே நீட் தேர்வில் தேர்ச்சி அடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை உறுதிசெய்யவும் ஆய்வு என்பது அவசியமாவதால், இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு, அரசுப் பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என கூற முடியாது எனவும் பதில் மனுவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குழு அரசுக்கு அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் கரு. நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.