Skip to main content

நீட் தேர்வின் நோக்கம் தரத்தை வளர்ப்பதா... நிகர்நிலை பல்கலை.களை வாழ வைப்பதா? அன்புமணி இராமதாஸ் கேள்வி

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

நீட் தேர்வின் நோக்கம் தரத்தை வளர்ப்பதற்கா இல்லை.. நிகர்நிலை பல்கலை.களை வாழ வைப்பதற்கா? என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அழகான ஓவியம் வரைவதாகக் காட்டிக்கொண்டு அருவருப்பான கிறுக்கல்களை படைப்பதற்கு ஒப்பானது தான் மருத்துவப்படிப்பில் சேருவதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள நீட் தேர்வு  ஆகும். மிகவும் உன்னதமான நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் நீட் தேர்வு அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை; மாறாக தனியாருக்கு சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கோடிகளை குவிக்கும் வெறிக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2011-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட போது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுவரை சட்டவிரோதமாக வசூலித்துக் கொண்டிருந்த பணத்தை இப்போது சட்டப்படியாக வசூலிக்க நீட் தேர்வு வகை செய்திருக்கிறது என்பதே உண்மை.
 

நீட் தேர்வு என்பதே ஏமாற்று வேலை ஆகும். நீட் என்பதன் விரிவாக்கம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்றாலும் கூட, தேசிய அளவில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், அதற்காக நுழைவுத்தேர்வை மட்டும் தான் அறிமுகம் செய்திருக்க வேண்டும்; முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தியிருக்கக் கூடாது. நுழைவுத் தேர்வுக்கும், தகுதித் தேர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக  தமிழகத்தில் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு 9451 இடங்கள் உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுப்பிரிவு வாரியாக தரவரிசை தயாரிக்கப்  படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2504 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், அவ்வகுப்பினருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலில் உள்ள 2504 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இம்முறையில்  9451 இடங்களுக்கு அதிகபட்சமாக 10,000 பேர் மட்டும் தான் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
 

ஆனால், நீட் தேர்வு அப்படிப்பட்டதல்ல. நாடு முழுவதும்  மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு 1,15,775 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இடங்களை விட 6 மடங்கு மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க  வேண்டிய தேவை என்ன? இதன் பின்னணியில் தான் சதி ஒளிந்திருக்கிறது. அனைத்து வகை மருத்துவ படிப்புகளுக்குமான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1.05 லட்சம் இடங்கள் தர வரிசையில் முன்னணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு விடும்.


 

The aim of the selection is not to develop quality


 

இவை தவிர நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 10,000 இடங்களுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவர். இந்த இடங்களை நிரப்ப தரவரிசையில் முன்னணியில் உள்ள 10,000 பேரை அழைத்தால் அவர்களில் தகுதியுடைய 1000 பேர் கூட சேர மாட்டார்கள். காரணம் அரசு மருத்துவக் கல்லூரிகளில்  மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.13,600 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களில் ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் ரூ.22.50 லட்சமும்,  குறைந்தபட்சமாக ஸ்ரீ சத்யசாய் மருத்துவக்கல்லூரியில் ரூ.18 லட்சமும் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதில் சேர எவரும் முன்வர மாட்டார்கள். இதனால் அந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடம் நிரம்பாமல் இருந்துவிடக் கூடாது  என்பதற்காகத் தான் தகுதித் தேர்வு என்ற பெயரில் 6 மடங்கு மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கின்றனர்.
 

இவை உண்மை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களை நிரப்ப மத்திய அரசு மூலம்  இரு கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த கலந்தாய்வுகளில் 10% மட்டுமே நிரப்பப்பட்டன. அதற்குள் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம்  முடிந்துவிட்டது. அத்தகைய சூழலில் 90% இடங்களையும் காலியானதாக அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்தால் நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் வருவாய் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்ட மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை அணுகி கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டித்ததுடன், காலியாக உள்ள 5500 இடங்களை நிரப்ப 1:10 என்ற விகிதத்தில் 55,000 பேரை கலந்தாய்வுக்கு அழைக்கவும் அனுமதி பெற்றுத் தந்தது. இதனால் நீட் தேர்வில் 720க்கு 125 மதிப்பெண் பெற்றவர்களுக்குக் கூட  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது. 720-க்கு 300 மதிப்பெண் பெற்ற பலரிடம் பணம் இல்லாததால், தகுதி இருந்தும் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனது. அதேநேரத்தில் 125 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவருக்கு தகுதி இல்லாவிட்டாலும் பணம் இருந்ததால் நிகர்நிலை மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது. இத்தகைய சூழலில் நீட் தேர்வால் கல்வித்தரம் உயருகிறது;  கல்வி வணிகமாவது தடுக்கப்படுகிறது என மத்திய அரசு கூறுவது கேலிக்கூத்தின் உச்சக்கட்டமாகும்.
 

மருத்துவக் கல்லூரியின் தரத்தை உயர்த்துவதற்காகத் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 96 மதிப்பெண், அதாவது 13.89% எடுத்தாலே மருத்துவம் படிக்க தகுதி என்று நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்? 12-ஆம் வகுப்பில்  தேர்ச்சி பெற 35% மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், அது தகுதிக்கான அடையாளம் இல்லை என்று கூறி விட்டு, 13.89% மதிப்பெண் எடுப்பது தான் தகுதி என்பது நகைப்புக்குரியதாகும். பணம் படைத்தவர்கள் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் தொகையை விட 150 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது கொள்ளை அல்லவா? இதுதான் மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கும் லட்சனமா? மொத்தத்தில் நீட் தேர்வு தகுதியை உறுதி செய்யும் தேர்வு அல்ல... மாறாக தகுதியற்ற பணம் படைத்தவர்களுக்கு தகுதி வழங்கும் தேர்வு என்பதே உண்மை.
 

நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவப்படிப்புக்கான சட்டவிரோத நன்கொடையாக ரூ.20 லட்சம் முதல்  ரூ.70 லட்சம் வரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வசூலித்தன. நீட் தேர்வு வந்தவுடன் அந்த நிலை மாறவில்லை. மாறாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வீதம், மருத்துவப் படிப்பை முடிப்பதற்குள் ஒன்றரை கோடி வரை சட்டப்பூர்வ கட்டணமாக நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலித்துக் கொள்கின்றன. இப்படியாக நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழைகளுக்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காமல் தடுத்த மத்திய அரசு, மருத்துவப்படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
 

இந்த சிக்கலுக்கு தீர்வு காண மாநில அரசால் நிரப்பப்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்  நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்