கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்திடம் வெளிநாடு வாழும் தமிழர் நலச் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நூருல்லா தலைமையில் வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த கிரிஜா என்பவர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது தந்தை அன்பு (வயது 54) கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் சவூதிக்கு சென்றவர், அங்குள்ள ரியாத் நகரில் ஒரு வீட்டு வேலைக்கு சேர்ந்தார். கடந்த செப்டம்பர் 21 அன்று அங்குள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பால் கீழே விழுந்து உயிரிழந்தார். எனவே தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி இறந்த எனது தந்தை அன்புவின் உடலை ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
ரியாத்தில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது அன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சி.சி.டி.வி காட்சிகள் தன்னிடம் உள்ளதாக கூறி அதனையும் மாவட்ட ஆட்சியரிடம் காட்டினார் மகள் கிரிஜா. அந்தக் சி.சி.டி.வி கட்சியில் வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த அன்பு திடீரென கீழே விழுந்து உயிரிழக்கும் காட்சி உள்ளது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் இறந்தவரின் உடலை கொண்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி அனுப்பி வைத்தார்.