தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் (10.04.2023) திங்கட்கிழமை அன்று கும்பகோணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நா.ரவிச்சந்திரன் அவர்களால் நீட் இலவச பயிற்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. பயிற்சியில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான கருத்தாளர்கள் பள்ளிக் கல்வித்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு தேர்வுகளையும் நடத்தி நீட் தேர்வை சிறப்பாக எதிர் கொண்டு நல்ல மதிப்பெண் பெறுவதற்கு தயார் செய்வதற்கான ஆயத்த கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அல்லி மற்றும் இதர ஆசிரிய பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஏற்பாட்டை செய்து இருந்தனர்.
இப்பயிற்சி இன்று முதல் மே 6 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் தவிர ஏனைய நாட்களிலும் நடைபெறும். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது, ‘அரசுப் பள்ளியில் படிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் ஏழை நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களால் பணம் அதிகமாக செலுத்தி நீட் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாது என்ற எண்ணத்தில் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக் கல்வித்துறை மூலமாக ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியாக நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்வதற்கு பாட ஆசிரியர்களை நியமித்துள்ளது. அவர்கள் மூலம் மாணவர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் சரி செய்து தேர்வில் வெற்றி அடைவதற்கு முழுமையான வழிகாட்டுதல் செய்யப்பட இருக்கிறது. இப்பயிற்சியானது கடந்த இரண்டு ஆண்டுகளாக செம்மையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு அதாவது இன்றிலிருந்து தொடங்குகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயிற்சியை சரியாக எடுத்துக் கொண்டால் நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்ணை பெற முடியும். அரசினுடைய உள் ஒதுக்கீட்டில் (7.5 %) விழுக்காடு இடத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக பெற முடியும். அது மட்டுமல்லாது தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு முழுமையாக கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஏதுமின்றி அவர்கள் படித்து மருத்துவராக முடியும். நன்றாக படித்து ஒரு நல்ல மருத்துவராக செயலாற்ற முடியும். எனவே இந்த நீட் தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் இப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். சிறப்பாக பயிற்சி பெற்று கூடுதல் மதிப்பெண்களை பெற வேண்டும் என கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் நா.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார். நாளை முதல் முறையாக இந்த பயிற்சி மையம் சிறப்பாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.