திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் வசித்து வந்த பிரபல டாக்டர் சக்திவேல் வீட்டில் கடந்த மாதம் 15ஆம் தேதி மர்ம கும்பல் நுழைந்து, வீட்டில் இருந்த 150 பவுன் நகைகளையும், ரூ.25 லட்சத்தையும் கொள்ளையடித்துவிட்டு அவர்களையும் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றது. இது தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் ஒரு டி.எஸ்.பி., நான்கு இன்ஸ்பெக்டர்கள், 11 சப்-இன்ஸ்பெக்டர்கள், 14 போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தமிழகம் முழுவதும் விசாரணையிலும், தேடுதல் வேட்டையிலும் இறங்கியது காவல்துறை.
அந்த விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அந்தப் பகுதிக்கு ரவுடி நீராவி முருகன் வந்துபோனது தெரியவந்தது. அதனால், தனிப்படையில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பழனி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் காங்குமணி, சத்தியராஜ், சேக்முபாரக், சுகந்தகுமார் ஆகிய நான்கு பேரை மட்டும் அப்பகுதியில் தீவிரமாக விசாரிக்க ஏ.டி.எஸ்.பி. லாவண்யா உத்தரவிட்டார்.
இவர்கள் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நீராவி முருகன் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதில், அவர் பயன்படுத்தி வந்த இனோவா காரையும், செல்போனையும் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தொடர்ந்து கண்காணித்து வந்தார். அதன் மூலம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் நீராவி முருகன் இருப்பது தெரியவந்தது. அவர் இருப்பிடத்தை அறிந்த ஏ.டி.எஸ்.பி. லாவண்யா, நீராவி முருகனை பிடிக்க எஸ்.ஐ. இசக்கிராஜா தலைமையிலான காவல்துறையை அனுப்பி வைத்தார்.
எஸ்.ஐ. இசக்கிராஜா தலைமையிலான காவல்துறையினர் நாங்குநேரி பகுதியில் நீராவி முருகனை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும், நீராவி முருகனுக்கும் நடந்த மோதலில் எஸ்.ஐ. இசக்கிராஜா உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதில், ரவுடி நீராவி முருகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பலத்த காயம் அடைந்த எஸ்.ஐ. இசக்கிராஜா உள்பட நான்கு போலீசாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக எஸ்.ஐ. இசக்கிராஜா கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது; “கடந்த புதன்கிழமை (16ம் தேதி) நீராவி முருகனை பிடிப்பதற்காக நாங்குநேரி பாலத்தின் கீழே காத்திருந்தோம். அப்போது களக்காடு ரோட்டில் நீராவி முருகனின் இனோவா கார் போவதை பார்த்து நாங்கள், எங்களது வாகனத்தில் அவரை பின்தொடர்ந்தோம். களங்குனி என்ற ஊரின் பக்கம் அவரின் காரை நெருங்கும்போது எங்கள் வாகனத்தைப் பார்த்து சுதாரித்த நீராவி முருகன், தனது காரை நிறுத்தினார். நாங்களும் எங்களது காரை சற்று தூரத்தில் நிறுத்தி கண்காணித்தோம்.
திரும்பவும் அங்கிருந்து கார் வேகமாக புறப்பட்டது. நாங்களும் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்றோம். அப்போது எங்களது டெம்போ டிராவலை வைத்து காரை தடுத்தபோது நீராவி முருகனின் காரின் பின்பக்கம் இடித்து கார் நின்றது. அப்போது காரில் இருந்த நீராவி முருகன் வாளை(கத்தியை) எடுத்துக் கொண்டு கீழே இறங்கி காட்டுக்குள் ஓடினார். நாங்களும் அவரை பின்தொடர்ந்து விரட்டினோம். அப்போது காலவர்களான சத்தியராஜீம், காங்குமணியும் நீராவி முருகனை பிடிக்க முயற்சி செய்தனர். அதைக்கண்டு தனது கையில் வைத்திருந்த வாளை எடுத்து அவர்களை வெட்டியதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், காவலர் சுகந்தகுமார் நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது அவரையும் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளிவிட்டு தனது வாளால் வெட்ட முயன்றார்.
அதை நான் பார்த்து தடுக்க முயன்றபோது நீராவி முருகனோ எங்களை பார்த்து, “என்னையவாடா பிடிக்க வந்திருக்கீங்க. உங்களை கொல்லாமல் விடமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டு வாளால் என் தலையில் வெட்டியதில் எனக்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டது. நான் அவரைக் காலால் மிதித்து கீழே தள்ளினேன். அப்படியிருந்தும் நீராவி முருகன் மீண்டும் எழுந்து வாளை ஓங்கிக்கொண்டு, “ஒரு போலீஸ்கூட உயிருடன் போக முடியாது; உங்களை கொல்லாமல் விடமாட்டேன்” என்று மிரட்டி என்னை வெட்ட வந்தபோதுதான் என் உயிரையும், என்னுடன் வந்த காவலர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நீராவி முருகனை துப்பாக்கி மூலம் சுட்டேன். அதில் அவர் இறந்தார்” என்று கூறியிருக்கிறார்.
இது சம்மந்தமாக ஏ.டி.எஸ்.பி. லாவண்யாவிடம் கேட்டபோது, “ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ. இசக்கிராஜா உள்பட நான்கு போலீசார்களுக்கும் உடம்பில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரை கொலை செய்யும் அளவுக்கு தாக்கி இருக்கிறார் நீராவி முருகன். கொஞ்சம் விட்டிருந்தால் அவர்களது உயிருக்கு ஆபத்து வந்திருக்கும். அதனால்தான் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இனி அவரின் கூட்டாளிகளை பிடித்து விசாரிப்பதின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணங்கள் எங்கே இருக்கிறது எனத் தெரியவரும். அதுபோல் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நீராவி முருகன் மேல் இருந்து வந்ததின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாரும் அவரை தேடி வந்தனர். அதுபோல் நாங்களும் 20 டீம்களை அமைத்து கடந்த ஒரு மாதமாக தீவிரமாக தேடி வந்ததின் அடிப்படையில்தான் நீராவி முருகன் பதுங்கியிருந்த இடத்தையும் கண்டுபிடித்து அவரை பிடிக்கும் முயற்சியில் இறங்கியபோதுதான் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது” என்று கூறினார்.
நீராவி முருகனின் என்கவுண்டர் மற்ற ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுள்ளது.