ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் மாணவி ஆயிஷா ருக்சானா. இவர் கீழக்கரை தாசிபி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சைபர் செக்யூரிட்டி சிஸ்டம் படித்து வருகிறார். முதலில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் வகித்தார். பின்பு மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து சமீபத்தில் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரைப் பாராட்டும் விதமாக கீழக்கரை ‘நம்ம தெரு நட்பு’ சார்பாக இளம் சாதனையாளர் விருது வழங்கி அவரை கௌரவித்தனர்.
மேலும் இது பற்றி மாணவி ஆயிஷா ருக்சானா கூறியதாவது, "தமிழ்நாடு, பாண்டிச்சேரி சார்பாக தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவி நான் மட்டுமே. அதிலும் கீழக்கரை பகுதியிலிருந்து டெல்லி வரை செல்வது என்பது, வீட்டில் உள்ளவர்களிடம் கூறி அவர்களிடம் இருந்து அனுமதி வாங்குவது என்பது பெரிய விஷயமாக இருந்தது. இருந்த போதும் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு மிகவும் உதவிகரமாக செயல்பட்டு அவர்களும் என்னுடன் டெல்லிக்கு வந்தார்கள். அதற்கு முன்பாக இது சம்பந்தமாக நான் ஹிஜாப் அணிந்துதான் வருவேன். அங்கு உள்ள அதிகாரிகள் அதற்கு ஏதாவது சொன்னால் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என உறுதியாக இருந்தேன். அதற்கு அங்குள்ள அதிகாரிகள், ‘எந்த பிரச்சனையும் வராது வாருங்கள்' என்றனர்.
அதேபோல் டெல்லி சென்றபோது ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் ஹிந்தியை பேசுவதில்தான் ஆர்வம் காட்டினார்கள். நானும் ஓரளவு இந்தியில் பேசி சமாளித்தேன். பிரதமருடன் பேசும்போது ஆங்கிலத்தில் பேசினேன். இப்பொழுது இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டது எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. நான் இவ்வளவு தூரம் சென்றதற்கு என்னுடைய குடும்பத்தினர் தான் காரணம். இதற்கு முன்பாக லண்டன் பார்லிமென்ட்டில் பேசுவதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை" என்றார் வருத்தத்துடன்.