Skip to main content

நீட் தேர்வில் முறைகேடென மாணவி தொடர்ந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவு! 

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

National Examinations Agency ordered to respond in case of student misconduct in NEET exam!

 

 

நீட் தேர்வில் முறைகேடு நடத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், வழக்கு தொடர்ந்த மாணவியின் அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பாக பதிலளிக்கும்படி, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரேயா, உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ‘மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் வெற்றிபெற உரிய பயிற்சி எடுத்துக்கொண்டேன். தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் மாதிரி தேர்வில், 720 மதிப்பெண்களுக்கு 668 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.  கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று, திருப்திகரமான முறையில் தேர்வு எழுதினேன். தேர்வு முடிந்த பின்பு வெளியிடப்பட்ட சரியான பதில்களைச் சரிபார்த்ததில்,  720 மதிப்பெண்களுக்கு 637 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். நீட் தேர்வில் 90 கேள்விகளில் ஒரே  ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை.  ஆனால்,  நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 720 மதிப்பெண்களுக்கு 252 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றது அதிர்ச்சி அளித்தது. 

 

தேர்வு முடிவுக்குப் பின்பு,  இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஓ.எம்.ஆர். விடைத்தாளில் 11 கேள்விகளுக்கு பதில் அளிக்காதது போல் உள்ளது. இணையத்தில் விடைத்தாள்கள் வெளியிட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத்தடை விதிக்கவேண்டும்.  மேலும்,  என்னுடைய அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்,  வழக்கு தொடர்ந்துள்ள  மாணவியின் அசல் விடைத்தாளை சமர்பிப்பது குறித்து,  தேசிய தேர்வு முகமை மற்றும் சி.பி.எஸ்.இ,  வரும் செவ்வாய்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்