வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் பகுதியில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை (9 ஆம் தேதி) இரவு மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு புயல் மற்றும் மழையின் போதும் சிதம்பரம், அண்ணாமலை நகர், வல்லம்படுகை, புதுச்சத்திரம், சாமியார்பேட்டை, பெரியப்பட்டு, பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில், தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம் உட்பட சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
புயல், மழையால் பாதிக்கப்படும் இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 27 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை மாலை முதல் சிதம்பரத்தில் முகாமிட்டுள்ளனர். அதேபோல் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிக்கு அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூரல் மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் மழையையொட்டி கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.