தமிழக தலைநகரான சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை சால்வை அணிவித்து வரவேற்றார். அதேபோல் கிருஷ்ணர் சிலை ஒன்றையும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசாக அளித்தார். அதனைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக வரவேற்புரையாற்றினார். அதேபோல் முதல்வரும் வரவேற்புரையாற்றினார். பின்னர் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி ''வணக்கம் சென்னை'' ''வணக்கம் தமிழ்நாடு'' என தமிழில் உரையை ஆரம்பித்தார். மேலும் அவர் பேசுகையில், ''இனிய வரவேற்பளித்த மக்களுக்கு நன்றிகள். சென்னையிலிருந்து முக்கியமான கட்டமைப்பு திட்டங்களை தொடங்கியுள்ளோம். தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும். சென்னைக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 636 கிலோமீட்டர் தூரம் கல்லணையை புதுப்பிக்க இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டு. நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்'' என்ற அவர், ''வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்'' என்ற அவ்வையார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.
அதேபோல் ''ஆயுதம் செய்வோம்... நல்ல காகிதம் செய்வோம்'' என்ற பாரதியின் பாடலையும் குறிப்பிட்டு ஆயுதங்களின் முக்கியத்துவம் பற்றியும் பிரதமர் மோடி பேசினார்.
மேலும் பேசிய அவர் ,''உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் இந்தியாவில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா சமூக பொது கட்டமைப்புகளை அதிவிரைவாக மேம்படுத்தி வருகிறது. தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது. அவர்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இலங்கைவாழ் தமிழ் சகோதர சகோதரிகள் மீது மத்திய அரசு அக்கறை காட்டி வந்துள்ளது.
வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
இறுதியாக 'வணக்கம்' என தெரிவித்த பிரதமர் முதல்வர், துணைமுதல்வருடன் கைகளை கோர்த்து உயர்த்தி பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் நேரு அரங்கில் பிரதமருக்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட அறையில் பிரதமரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பத்திலிருந்து பதினைந்து நிமிடம் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பில் முதல்வர், அரசு கோரிக்கைகளையும், அதேபோல சில அரசியல் சார்ந்த விஷயங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் துணைமுதல்வர் ஓபிஎஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.