கடந்த 2019 நவம்பரில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியின் மறுகால்குறிச்சி கிராமத்தின் வாலிபர் நம்பிராஜனும் அடுத்த தெருவிலிருக்கும் வான்மதி என்பவரும் காதலித்ததோடு அவர்களிருவரும் நெல்லை சென்று திருமணம் செய்து கொண்டனர். அதனைப் பெண்வீட்டார் எதிர்த்ததோடு பழி வெறியாய் அரிவாளை ஓங்கியதில் நம்பிராஜன் படுகொலை செய்யப்பட்டார். பதிலுக்கு நம்பிராஜனின் தரப்புகள் மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் செப்., 26ம் தேதியன்று 12 பேர்கள் கொண்ட கும்பலாய் மறுகால்குறிச்சியில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசியும் வீச்சரிவாட்களால் வெட்டியும் சண்முகத்தாய், சாந்தி என இரண்டு பெண்கள் படுகொலையானார்கள். இப்படி எடைக்கு எடை என்று இரு தரப்புகளும் மோதிக் கொண்டதில் மொத்தம் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் தொடர் பதற்றத்திலிருக்கிறது நாங்குநேரி.
பெண்கள் இரட்டைக் கொலையில் ஈடுபட்ட கும்பலின் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணனின் நடவடிக்கையின்படி தொடர் பதற்றத்திலிருக்கும் நாங்குநேரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதுடன் இறந்தவர்களின் வீடுகளிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பிலிருப்பதோடு, நகரமும் தொடர் நிழல் கண்காணிப்பிலிருக்கிறது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தீவிரமாக்கியிருக்கிறார் எஸ்.பி.மணிவண்ணன்.