மதுவுக்கு எதிராக போராடிவரும் வழக்கறிஞர் நந்தினிக்கு குணா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது.
தனது தந்தை ஆனந்த் துணையுடன் மதுவிலக்கிற்காக தனியாக போராடி வருபவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. மதுவிலக்கு போராட்டம் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடந்த மது எதிர்ப்பு போராட்டத்தில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நந்தினி மற்றும் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக திருப்பத்தூர் கோர்ட்டுக்கு வந்த தந்தை-மகள் மீது கோர்ட்டு அவமதிப்பு புகாரும் கூறப்பட்டது. இந்த புகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவே நந்தினியின் திருமணத்துக்கு தடையாக அமைந்தாலும், இன்னொரு தேதியில் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நந்தினி உறுதிபட தெரிவித்தார்.
இந்த நிலையில் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் நேற்று திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கோர்ட்டு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து நந்தினி மற்றும் ஆனந்தன் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் அவருக்கும் அவரது காதலருக்கும் திருமணம் நடந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இன்று (10.07.19-புதன்கிழமை) மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தினி ஆனந்தன் குடும்பத்தின் குலதெய்வ கோவிலில் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. 9ம்தேதி சிறையிலிருந்து வெளியே வந்த நந்தினிக்கும் குணாவுக்கும் இன்று (10.07.19-புதன்கிழமை) மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து நந்தினி கூறியதாவது "எங்களது திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துவரும் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம். ஏற்கனவே எங்களது திருமணத்தை நிறுத்திய இந்த அரசு மேலும் ஏதாவது தொல்லை கொடுக்கும். எல்லாவற்றையும் இனி என் கணவரோடு சேர்ந்து எங்கள் குடும்பம் மக்களுக்கு எதிராக எதை கொண்டுவந்தாலும் அதை துணிவோடு எதிர்போம். எங்கள் குடும்பம் போல் மக்களும் உண்மைக்கு குரல் கொடுக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மதுவுக்கு எதிரான போராட்ட்டம் இனி மிக தீவிரமாக சேர்ந்து எதிர்ப்போம் என்றார்.