சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குமாரபாளையம் மேற்கு காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவன். இவருடைய மகன் சக்திவேல் (24). இவரும், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த மங்களபுரத்தைச் சேர்ந்த ஸ்டான்லி மகன் தோனி என்கிற பாபு, மங்களபுரம் ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் செந்தில்குமார் ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி இரவு நேரங்களில் மங்களபுரம் அருகே உள்ள சிங்கிலியன்கோம்பை மலைப்பகுதியில் முயல் வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
அதன்படி, புதன்கிழமை (மே 27- ஆம் தேதி) இரவு 11.00 மணியளவில், மூவரும் முயல்வேட்டைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வேட்டையாடும் பகுதி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அப்போது சக்திவேல், தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். திடீரென்று கைத்தவறி துப்பாக்கி விசை மீது விரல்கள் மோதியதில் திடீரென்று துப்பாக்கி வெடித்தது. இதில் சக்திவேல் மீது பால்ரஸ் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், தோனி ஆகியோர் சக்திவேலின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வாழப்பாடிக்குச் சென்றனர். அங்கு சக்திவேலின் வீட்டின் முன்பு அவருடைய சடலத்தை வீசி விட்டு இருவரும் தப்பிச்சென்று விட்டனர். மறுநாள் (மே 28- ஆம் தேதி) அதிகாலையில் வீட்டு முன்பு சக்திவேல் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த குடும்பத்தினர், இதுகுறித்து மங்களபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தற்செயல் விபத்து மூலம் துப்பாக்கி வெடித்து சக்திவேல் பலியாகி இருப்பது தெரிய வந்தது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தோனி, செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.