நாமக்கல் அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (27). நாமக்கல் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா (23). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுடன் ஒரே வீட்டில் அனிதாவின் தந்தை கருப்பசாமியும் (50) வசித்து வருகிறார்.
கடந்த அக்.14ம் தேதி இரவு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், விமல்ராஜின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த விமல்ராஜையும், அனிதாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வீட்டின் மற்றொரு அறையில் படுத்திருந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் வெட்டிவிட்டு ஓடினர். கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கருப்பசாமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் எலக்ட்ரானிக் பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வரும் நிக்கல்சன் (31) மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்துதான் இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
கொல்லப்பட்ட அனிதாவின் அண்ணன் அருண், கோவையில் எலக்ட்ரிகல் வேலைகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வருகிறார். அவரும் நிக்கல்சனும் நெருக்கமான நண்பர்கள். இந்தப்பழக்கத்தில் நிக்கல்சன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததில் அவருடைய மனைவிக்கும் அருணுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நிக்கல்சன் அருணுடன் முன்பே தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, நிக்கல்சனின் மனைவி திடீரென்று மாயமானார். தனது மனைவியை அருண்தான் கடத்தி வைத்திருப்பதாகக் கருதி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.
இதற்கு பழிதீர்க்காமல் விட மாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் அருணின் மீதுள்ள ஆத்திரத்தில் அவருடைய தங்கை அனிதா, கணவர் விமல்ராஜ் ஆகியோரை கூட்டாளிகளுடன் சென்று வெட்டி கொன்றுள்ளார். நிக்கல்சனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் சரணடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய நிக்கல்சனின் கூட்டாளிகளான நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த 'பழக்கடை' ரகுவரன் (28), கோபி (23) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். விரைவில் நிக்கல்சனை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரிய வரும்.