எஸ்.எஸ்.எல்.சி. மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் மதிவாணன் (52). இவர், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிவந்தார். இவர் மீது அந்தப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவரும் மாணவிகளின் பெற்றோர் சிலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகார் மனுவில், ஆசிரியர் மதிவாணன் எஸ்.எஸ்.எல்.சி. மாணவிகள் சிலருக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு கொடுத்துவருகிறார் என்று கூறியிருந்தனர். இந்தப் புகார் மனு, உரிய நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மூலமாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (07.12.2021) அதிகாலையில் காவல்துறையினர் பரமத்தி வேலூரில் உள்ள ஆசிரியர் மதிவாணன் வீட்டிற்குச் சென்று, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் பள்ளிக்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, ஆசிரியர் மதிவாணன் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, மதிவாணனுடன் பணியாற்றிவந்த ஆசிரியர்கள், அவர் மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி டிச. 6ஆம் தேதி இரவு, பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குத் தினமும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
பாலியல் புகாரில் பட்டதாரி ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம் நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.