நாமக்கல் அருகே, முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி, ஆண் நண்பர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரைத் தீர்த்துக்கட்ட கூலிப்படை கும்பலுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (42), முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி கவிதா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே ஊரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் செல்வராஜ் (29). இவருக்கும், கவிதாவுக்கும் தவறான தொடர்பு இருந்துவந்துள்ளது.
சிவகுமார் ராணுவத்தில் இருந்தபோது வீட்டில் தனியாக இருந்த கவிதாவுக்கும், செல்வராஜுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார். மனைவியின் தவறான நடத்தை குறித்து தெரியவந்தபோதே அவர் கண்டித்துள்ளார். ஆனாலும் கவிதா அதைப் பொருட்படுத்தாமல் செல்வராஜ் உடனான நட்பை தொடர்ந்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், மனைவியை அடிக்கடி அடித்து உதைத்துள்ளார்.
தான் நினைத்தபடி வாழ கணவர் தடையாக இருப்பதாகக் கருதிய கவிதா, அவரை தீர்த்துக்கட்டிவிட முடிவுசெய்தார். அவருடைய ஆண் நண்பர் செல்வராஜும் இதற்கு ஒப்புக்கொண்டார். இதற்காக சிவகுமாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை அமர்த்தியுள்ளனர். இந்நிலையில் ஜூலை 5ஆம் தேதி இரவு சிவகுமார், நல்லையம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். குமரிபாளையம் பனங்காடு அருகே அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கூலிப்படை கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மோகனூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர். முதல்கட்ட விசாரணையில், இந்தக் கொலையின் பின்னணியில் சிவகுமாரின் மனைவி கவிதாவும், அவருடைய ஆண் நண்பர் செல்வராஜும்தான் மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ஜூலை 6ஆம் தேதி கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் கூலிப்படையாக செயல்பட்ட சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (49), விமல் ஆனந்த் (38), கலைமணி (36), சுரேஷ் (32), சிலம்பரசன் (35), பார்கவியின் தாயார் அம்சவள்ளி (49) ஆகிய 6 பேரையும் ஜூலை 7ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கவிதாவும், அவருடைய தாயாரும் சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், மற்றவர்கள் நாமக்கல் மாவட்ட கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கடந்த 5ஆம் தேதி சிவகுமார் தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாக கவிதாவிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் கிளம்பியுள்ளார். அவரிடம் அடிக்கடி செல்ஃபோனில் தொடர்புகொண்டு, அவர் சென்றுகொண்டிருக்கும் இடத்தைக் கேட்டிருக்கிறார். அவர் எந்த இடத்தில் சென்றுகொண்டிருக்கிறார் என்பது குறித்து கவிதா உடனுக்குடன் தனது ஆண் நண்பர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். அன்று இரவு உள்ளூரில் இருந்தால் மற்றவர்களுக்கு சந்தேகம் வரும் எனக் கருதிய செல்வராஜ், ஈரோட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே சிவகுமாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையினரை 2 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி அழைத்து வந்துள்ளார்.
சிவகுமாரின் இருப்பிடத்தை கேட்டுத் தெரிந்துகொண்ட கவிதா, அதை செல்வராஜுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர் கூலிப்படையினருக்குத் தகவல் அளித்துள்ளார். இந்த நெட்வொர்க்கின்படியே கூலிப்படையினர் சிவகுமாரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.