நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருடைய மகன் ஜெயக்குமார் (40). பட்டறைமேடு என்ற இடத்தில் கண்ணாடிக் கடை நடத்தி வந்தார்.
இவர், செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) இரவு 09.30 மணியளவில், வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர், திடீரென்று கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் அதன்பின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
மறுநாள் (ஜூலை 1) காலை வீட்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில், தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் சடலமாகக் கிடந்தார். மர்ம நபர்கள் அவரின் கழுத்தைக் கத்தியால் அறுத்தும், தலையில் பல இடங்களில் வெட்டியும் கொலை செய்துவிட்டு சடலத்தை வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ், எஸ்.ஐ. பூபதி மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூறாய்வுக்காக சடலத்தை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சடலம் கிடந்த இடத்திற்கு காவல்துறை மோப்ப நாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்த அந்த நாய், சடலம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு, நின்று விட்டது.
கொலையுண்ட ஜெயக்குமாருக்கு, கடன் தொல்லை இருந்து வந்தது. இது தொடர்பாக அவருக்கு பலருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவருடைய செல்போன் அழைப்புகளை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது.