நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மேலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனை தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை, 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், புதிதாக மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது நேற்று (ஏப். 28) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர், நாமக்கல் அருகே உள்ள குப்பம்பாளையத்தைச் சேர்ந்த 31 வயதான லாரி ஓட்டுநர் ஆவார்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு மத்தியபிரதேசத்தில் இருந்து பூண்டு பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கலுக்கு வந்து சேர்ந்தார். பரமத்தி வேலூர் சோதனைச்சாவடி அருகே அவருக்குத் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்ததில் லாரி ஓட்டுநருக்குக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவருக்குச் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதேபோல், நாமக்கல் அருகே காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 30 வயது இளைஞருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது பாதிக்கப்பட்டவருடன் சேர்த்து காளப்பநாயக்கன்பட்டியில் மட்டும் இதுவரை 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த கிராமத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளும் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளது.