தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு. இவருக்கு வயது 83. உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16.11.2021) அதிகாலை சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து, ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்கக் காரணமாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான இன்னொரு வழக்கு, பிளெசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு. இந்த வழக்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கிற்காக இவர் அங்கு சென்றபோது நடராஜனும் சென்றுள்ளார். இருப்பினும் அதனை தைரியமாக எதிர்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு காவல்துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு 1996 ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்க பல அதிகாரிகள் தயக்கம் காட்டிவந்தனர். அப்படிப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நல்லமநாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு நல்லமநாயுடுவின் விசாரணையும், அவர் சேகரித்த தடயங்களும் ஆவணங்களும் மிக முக்கிய காரணம். அத்துடன் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையே குற்றவாளிகளுக்குத் தண்டனையைத் தேடி தந்தது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களைத் திரட்டி சமர்ப்பிக்க பெரும் துயரங்களைச் சந்தித்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஓய்வுபெறும்போது உள்ள பலன்களை நிறுத்தியது. அரசு இல்லத்திலிருந்து காலி செய்யச் சொல்லி தொந்தரவு செய்ததால், வீட்டையும் காலி செய்துள்ளார். வழக்குக்காக லண்டனுக்குச் சென்ற கணக்கு வழக்குகளை சரியாக சமர்ப்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், அவரது மகன் பணியாற்றும் இடத்திலும் தொந்தரவு செய்துள்ளனர். இவ்வளவு தொந்தரவுகளையும், துயரங்களையும் இவர் தனியாகவே நின்று சந்தித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகா மாநிலத்தில் நடந்தது. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யாவுக்கு வழக்கு தொடர்பாக பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
1961ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகச் சேர்ந்த இவர், பின்னாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இந்த வாரம் அவர் பணியில் சேர்ந்து 60 ஆண்டுகாலம் முடிவடைகிறது. இதனை தன்னுடன் பணியாற்றியவர்களுடன் கொண்டாட இருந்தநிலையில் காலமானார்.
1997ஆம் ஆண்டே நல்லமநாயுடு ஓய்வுபெற்றுவிட்டார். நக்கீரன் பலமுறை வலியுறுத்திய பின்னர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த தன் அனுபவங்களை ‘என் கடமை. ஊழல் ஒழிக!’ என்ற புத்தகம் வாயிலாக சுயசரிதையாக பதிவுசெய்துள்ளார். அப்புத்தகத்தை நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.