
’கல்குவாரியை மூடு! மலையில் குடியேறிய மக்கள்’ என்ற தலைப்பில் 29.08.2018 அன்று நக்கீரன் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் வட்டத்தின் ஆனையூர் கிராம மக்கள் தங்களின் கிராமத்தில் செயல்படுகிற குவாரிகளின் அதிர் வெடிகளால் வீடுகள் தட தடப்பதையும், வீடுகள் விரிசல் விழுவதையும் அத்துடன் அவைகள் இடிந்து விழக் கூடிய அபாயத்தை உணர்ந்து அச்சப்பட்டவர்கள் பழைய குவாரிகளை மூடவும், புதிய குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யவும் வலியுறுத்தி தங்களின் கிராமத்திலுள்ள ஆனையூர் மலையில் குடியேறும் போராட்டம் நடத்தியதை வெளிக் கொண்டு வந்திருந்தோம்.
மேலும், மலை ஏறும் போராட்டம் நடத்திய மக்கள் கீழிறங்காமல், போராடியபோது அவர்களை அதிகாரிகள் சந்திக்காதது பற்றியும் தெரியப்படுத்தியிருந்தோம். தவிர, அந்த மக்கள் கீழிறங்காமல் மலையிலேயே தங்கியிருக்கிறார்கள். இதனிடைய நக்கீரன் இணையதள செய்தி வெளியான மறு நாள் காலையான இன்று, சங்கரன்கோவில் தாசில்தார் ராஜேந்திரன் ஆனையூர் மலைக்கிராமம் சென்று அம்மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். குவாரிகளை மூடும்படி நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதிஷ் உத்தரவிட்டதைச் தெரிவித்தவர், வாய்மொழி உத்தரவு தேவையில்லை. எழுத்துப் பூர்வமான உத்தரவு வேண்டும் என்ற மக்களிடம், அதன்படியே தருவதாகத் தெரிவித்த தாசில்தார், அம்மக்களில் சிலரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அவரின் எழுத்துப் பூர்வமான உத்தரவு கிடைத்ததும் தரையிறங்குவோம் போரட்டம் முடியும் என்றார் ஆனையூர் கிராமத்தின் பூபதி.