அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரை பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் விழா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழுத் தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. புகழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "முதலமைச்சர், திருநெல்வேலிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த நேரத்தில், நான் அந்த மாவட்டத்தின் சார்பாக இரண்டு மூன்று கோரிக்கைகளை வைத்திருந்தேன். அவர் புறப்படுகிற நேரத்தில் மருத்துவக் கல்லூரி கோரிக்கைகளை நான் சொன்னேன். ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது.
நான் இரண்டு வாரத்தில் வருகிறேன். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலே வைத்து இதற்கான உத்தரவு அனைத்தையும் வழங்குவோம் என்று கூறி உத்திரவாதத்தைத் தந்ததோடு மட்டுமில்லாமல், அவரது உதவியாளர் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசி அமைச்சர் வருகிறார், நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு செயலை செய்கின்ற போது, எந்த கட்சியாக, எந்த ஆட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றிப் பாராட்டுவதில் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த நேரத்திலே இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனை தொடர்பாக முன்வைத்த கோரிக்கையை சில நாட்களின் அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன், அமைச்சரையும், முதலமைச்சரையும் புகழ்ந்து பேசியுள்ளார். எனவே, அவர் விரைவில் தி.மு.க.வில் இணையலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.