Skip to main content

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

Published on 14/08/2024 | Edited on 14/08/2024
Nagai dt Vedaranyam near Arkattudhurai Fishermen incident

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆற்காட்டுத்துறையில் இருந்து மீனவர்கள் வழக்கம் போல் நேற்று (13.08.2024) மதியம் 2 மணியளவில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அந்த வகையில் சந்திரகாசன் என்பவரின் பைபர் படகில் பன்னீர்செல்வம், வேல்முருகன், முத்து, கிருஷ்ணன் உள்ளிட்ட 4 மீனவர்கள் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி இந்த மீனவர்கள் 4 பேரும் கோடியக்கரையில் இருந்து தென் கிழக்கே நேற்று இரவு 10.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் அதி நவீன எஞ்சின் பொருத்தப்பட்ட 2 பைபர் படகுகளில் அங்கு வந்துள்ளனர். அச்சமயத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவர்கள் மீது வீச்சு அரிவாள், இரும்பு பைப்கள் கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின் படகில் இருந்த சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ சீலா மீன்கள் பிடிக்கும் மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

Nagai dt Vedaranyam near Arkattudhurai Fishermen incident
பாதிக்கப்பட்ட மீனவர்கள்

இந்நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் 4 பேரும் இன்று (14.08.2024) மதியம் 3 மணியளவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாகத் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்