நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் கிராமத்தில், கடந்த 2008- ஆம் ஆண்டு 'நாகை பவர் ப்ளாண்ட் நிறுவனம்' அமைப்பதற்கு வாழ ஒக்கூர், நரிமணம், முட்டம் உள்ளிட்ட கிராமங்களில் 80 சதவீத விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பவர் ப்ளாண்ட் தொடங்கப்பட்டால், வாழஒக்கூர் கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் என பல சலுகைகளும் வழங்கப்படும் என உத்திரவாதம் கொடுத்தனர். ஆனால், நிறுவனம் துவங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும், அந்த கிராம மக்களை ஏமாற்றி வருகிறது அந்த நிறுவனம். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதச் சூழலில் நாகை பவர் ப்ளாண்ட் நிறுவனத்தைக் கண்டித்து பல்வேறு கட்டப் போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி சோர்ந்து விட்டனர்.
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தல் தான், தமக்கான வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் ஆயுதம் என முடிவெடுத்த அப்பகுதி மக்கள், "இதுநாள்வரை கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிய நாகை பவர் ப்ளாண்ட் நிறுவனத்தையும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதுபோல காலத்தைக் கடத்தி வரும் நாகை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும், கண்டித்து வாழ ஒக்கூர் கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவெடுத்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
100- க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக்கொடிகளை கட்டி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். நிறுவனம் துவங்கும்போது கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின்படி இளைஞர்களுக்கு நிரந்தர வேலைகளை வழங்க வேண்டும், கிராமத்தை மேம்படுத்த வேண்டும், நிலக்கரி துகள்கள் காற்றில் பரவி சுவாசப் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்க நிறுவனத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்திப் போராட்டத்தைத் துவங்கியிருப்பதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும், எங்களுக்கு வாழ வழியில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாழ ஒக்கூர் கிராம மக்கள் விளம்பரப் பதாகை வைத்து, தங்களின் குரலைப் பதிவு செய்துள்ளனர்.