பெரம்பலூரில் அதிமுக முக்கியப் பிரமுகரும், போலி நிருபர் ஒருவரும் சேர்ந்து கொண்டு வேலை கேட்டு வரும் பெண்களிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர் என்று காவல்த்துறையில் புகார் அளித்தவர் நாம் தமிழர் கட்சி மாவட்டச்செயலாளரும் வழக்கறிஞருமான அருள்.
இந்த புகார் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதற்கான ஆதாரமாக பாதிக்கப்பட்ட பெண் தன்னுடன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் பெரம்பலூர் வழக்கறிஞர் நலச் சங்கத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அருள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருளை சிறையில் அடைத்தனர் பெரம்பலூர் போலீஸார்.
மேலும் அருள் வெளியிட்ட ஆடியோ போலியானது என்று அவரது உதவியாளரான கலையரசி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் வழக்கறிஞர் அருள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையிலுள்ள, வழக்கறிஞர் அருள் பெண்களுக்கு பயத்தை உண்டாக்கி பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியதாக கூறி கணினி வெளிச் சட்டத்தின் கீழ் அருளை குற்றவாளி என கூறி (குண்டர் சட்டத்தில்) சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலினை மாவட்ட போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்ததையடுத்து வழக்கறிஞர் அருளின் தடுப்பு காவல் நீட்டிக்கப்பட்டது.