அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வனத்துறை காட்டுப் பகுதியில் நேற்று (28ம் தேதி) மதியம் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தம் அங்கு மட்டுமின்றி பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட பகுதிகளிலும் கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் செந்துறை அருகிலுள்ள குழுமூர் வனத்துறை காட்டில் ராணுவ ஹெலிகாப்டர் சிதறி விழுந்துள்ளது. அந்த சத்தம் தான் என்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் செய்தி பரவியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வங்காரம், குழுமூர் அங்கனூர், தத்தனூர், காளிங்கராய நல்லூர், சன்னாசிநல்லூர் வஞ்சினபுரம்., ஆர்.எஸ் மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்த காட்டுப் பகுதிக்கு திரண்டனர்.
இந்தத் தகவல் அரசு அதிகாரிகளுக்கு தெரியவந்தது, இதையடுத்து தீயணைப்பு துறை, 108 ஆம்புலன்ஸ், காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுமூர் வனத்துறை காட்டுப் பகுதிக்கு விரைந்து வந்து நீண்ட நேரம் காட்டுப்பகுதியில் சோதனை நடத்தினர். ஆனால், சமூகவலைதளத்தில் பரவியதுபோல் அங்கு ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை.
இதையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, ஹெலிகாப்டர் விழுந்து விபத்து என்ற செய்தி வதந்தியாக பரவியுள்ளது. அதுபோன்ற எந்த சம்பவமும் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் நடக்கவில்லை. அதை யாரும் நம்ப வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனாலும் சிலர், கடந்த 2011ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து படங்களை சமூக வலைதளங்களில் பரவச் செய்துவருகின்றனர்.
பயங்கர மர்மச்சத்தம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது