
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெயக்குமார்(37). இவர் வக்கணம்பட்டி பகுதியில் நியூ ஐஸ்வர்யா பேக்கரி என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து காசு இல்லாமல் ஸ்வீட் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஜெயக்குமார் ஸ்வீட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த சுத்தியால் கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். அதன் சிசிடிவி காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. அப்போது அந்த மர்ம நபரை ஜெயக்குமார் அவரது உறவினர்கள் உதவியுடன் பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த நபர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஜோலார்பேட்டை குப்புசாமி தெரு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரகாஷ்(47) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஓசியில் ஸ்வீட் கேட்டு பேக்கரி கடையை அடித்து உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.