விழுப்புரம் மாவட்டம், கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி மங்கையர்க்கரசி (60). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக தனது ஊரிலிருந்து விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு பின்னர் மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது அவரது அருகில் ஒட்டி உரசியபடி பெண் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் தன் மீது ஏதோ ஒரு பொருளைத் தடவியது போன்ற உணர்வு மங்கையர்க்கரசிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு அவர் நினைவிழந்துள்ளார்.
அந்தப் பேருந்து, புதிய பேருந்து நிலையம் வந்து சேரும்போது, மங்கையர்க்கரசிக்கு மீண்டும் சுயநினைவு திரும்பியுள்ளது. அப்போது அவர், தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின் பறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்குச் சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவுசெய்து போலீசார், பேருந்தில் மங்கையர்க்கரசியின் தாலிச் செயினை அறுத்து திருடிச் சென்ற பெண் யார் என்பது குறித்து தீவிரமாக தேடிவருகிறார்கள்.