Skip to main content

கண்ணிமைக்கும் நேரத்தில் ஆள் கடத்திய மர்ம நபர்கள்... துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர்!  

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Mysterious people who were kidnapped, Police who acted quickly

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரிலுள்ள தரம்சந்த் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் 26 வயது வினோத், திண்டிவனம் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார் வினோத். சந்த மேடு பகுதியில் அவர் வந்துகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வினோத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்திச் சென்றது. அப்போது அவரிடம் இருந்த செல்ஃபோனையும் பறித்துக்கொண்டு கடத்திச் சென்ற கும்பல், வினோத்திடம் தங்களுக்கு 50 ஆயிரம் பணம் கொடுத்தால்தான் உயிருடன் விடுவோம், இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

 

இதனால் பயந்துபோன வினோத், அவர்களிடம் இருந்த செல்ஃபோனை வாங்கி தனது நிறுவனத்தின் மேலாளரை தொடர்புகொண்டு கடத்தல்காரர்கள் தன்னைக் கடத்தி வைத்துக்கொண்டு 50 ஆயிரம் பணம் கேட்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த மேலாளர் உடனடியாக ரோசனை காவல் நிலைய போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார், கடத்தல் கும்பல் எங்கு உள்ளது என்பது குறித்து ரகசியமான முறையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீஸ் தங்களைத் தேடுவதை எப்படியோ தெரிந்துகொண்ட கடத்தல் கும்பல், போலீசாருக்குப் பயந்து நேற்று முன்தினம் (28.09.2021) இரவு வினோத்தை நொளம்பூர் சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து ரோசனை காவல் நிலையம் சென்ற வினோத், தன்னைக் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதில் திண்டிவனத்தை அடுத்துள்ள சாரம் பகுதியைச் சேர்ந்த முருகன், வசந்த், கிருஷ்ணகாந்த், தென்பாசார் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜசேகர் ஆகிய நால்வரும் சேர்ந்து வினோத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஈச்சரி குதியைச் சேர்ந்த அருள் என்கிற சசிகுமாரையும் போலீசார் தேடிவருகிறார்கள். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞரைக் கடத்திச் சென்ற கும்பல் 50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியது திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்